அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தைக் கூறி சுமார் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது வேதனைக்குரியது. நிதியுதவி நிறுத்தப்படும் என்று தெரிந்தால் மத்திய அரசை வலியுறுத்தி நிதியுதவியைப் பெற முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே முழு பொறுப்பேற்று பள்ளிகளை நடத்த வேண்டும். அதைவிடுத்து நிதியைக் காரணம்காட்டி அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. பள்ளிகளை இணைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும். காரணம் பள்ளிகளை இணைப்பதால் ஏற்கெனவே நீண்ட தூரம் நடந்தே பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் இன்னும் கூடுதல் தூரம் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே, மாநிலம் முழுவதும் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியையும் தமிழக அரசு மூடவோ, மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகும் வகையில் இணைக்கவோ கூடாது என்று வாசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment