சேமிப்பு பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய 2ம் வகுப்பு மாணவரை கலெக்டர் சந்தீப் நந்தூரி, பாராட்டி புதிய சைக்கிள் வழங்கினார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் சுப பிரியா தம்பதியரின் மகன் 2ம் வகுப்பு படித்து வரும் யோகேஷ்வரன் தனது சேமிப்பு மற்றும் தன் பள்ளி நண்பர்களிடம் பெற்ற பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்.
அப்போது கலெக்டர் நீங்கள் சேமித்த பணத்தில் என்ன வாங்க நினைத்தீர்கள் என கேட்டதற்குதான் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வந்ததாகவும், தற்போது கஜா புயலால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை பார்த்து எனது சேமிப்பு தொகையை வழங்குவதாக தெரிவித்தார். மாணவர் வழங்கிய உண்டியலில் ரூ.806 இருந்தது. இத்தொகை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது. 2ம் வகுப்பு மாணவரின் இரக்க குணத்தை கண்ட கலெக்டர், மாணவர் யோகேஷ்வரனுக்கு புதிய சைக்கிள் வழங்கிட முடிவு செய்தார். அதனடிப்படையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மாணவர் யோகேஷ்வரனை அழைத்து ரூ.4800 மதிப்பிலான புதிய சைக்கிளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment